Mithuna rasi guru peyarchi palangal 2017-18

மிதுன இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு 5-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 6, 11-க்குரிய செவ்வாய் சாரத்தில் பெயர்ச்சி ஆவதால், நன்மைகள் நடக்கும். 7, 10-க்குரிய குரு பகவான், பஞ்சமத்தில் அமர்கிறார். பட்ட துன்பங்கள், அலைச்சல்கள் அத்தனையும் பஞ்சு போல் பறந்துவிடும். உங்கள் ஜென்ம இராசியை, பாக்கியஸ்தானத்தை, லாபஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பு தேடி வரும். அயல்நாட்டில் உள்ளவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் அல்லல்படுவோர் இனி சொந்த வீடு வாங்கி சுபயோகம் காண்பீர்கள். பெற்றோரின் உதவி கிடைக்கும். பழைய சொத்துக்கள் சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கிறது. எந்த வகையில் தெரியுமா? குரு பகவான் 6-க்குரிய சாரத்தையும் பெறுகிற காரணத்தால், பயணங்களில் கவனம், அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பதில் கவனம், கூட்டு தொழில் செய்வதில் மிக, மிக, கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் நற்பலன் தருவார். நல்வாழ்த்துக்கள்.

மிருகசீரிஷம் (3,4), திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். உற்றார் -உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும், அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினையும் இன்றி வசூலாகும்.

19-12-2017 முதல் சனி பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும், சர்ப்ப கிரகங்களான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சாரம் செய்வதாலும் கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, குடும்ப விஷயங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் தெம்புடன் செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் கடன்கள் யாவும் படிப்படியாகக் குறைந்து கண்ணியமிக்க வாழ்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். சனி உங்கள் ராசியாதிபதி, புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகமிகச்சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் கடந்த காலங்களிலிருந்த மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்தவொரு காரியங்களிலும் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும்.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதுவரைபட்ட கஷ்டநஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பணம் பலவழிகளில் தேடிவருவதால் பொருளாதாரநிலை மிகமிகச்சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சேமிப்பு பெருகும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வம்பு, வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிதமான லாபமும், நல்ல வளர்ச்சியும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள், கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேன்மேலும் லாபத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபம் பெருகும். புதிய கிளைகளைக்கூட நிறுவமுடியும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாகச் செயல்படுவார்கள். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் பொருளாதார நிலையும் உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புகளும் உண்டாகும்.

பெண்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமையும். கடன்கள் குறையும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகமும், சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடமும், கணவன்வழி உறவுகளிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும்.

அரசியல்
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.

விவசாயிகள்
சகலவிதத்திலும் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மாணவமாணவியர்
மாணவ-மாணவிகள் கல்வியில் திறம்படச் செயல்பட்டு மதிப்பெண்களைச் சிறப்பாகப் பெறுவார்கள். மேற்கல்வியிலும் புதிய சாதனைகள் செய்யும் வாய்ப்பு அமையும். விளையாட்டுத்துறைகளிலும் மாகாண அளவில் வெற்றி பெற்று தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் உங்களுக்கு அனுகூலம் அளிப்பதாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள்கூட உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் யாவும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகும். உடன்பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டைஅயலாரின் ஆதரவுகள் தக்கசமயத்தில் அமையும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்திச்செய்ய பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவார்கள். எதிர்பார்த்த லாபங்களும் கிடைப்பதால் முதலாளி -தொழிலாளிகளிடையே இருந்த வேற்றுமைகள் மறையும். கலைஞர்களுக்கு கைநழுவிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர்களிட மிருந்து பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும். குரு பகவான் சாதகமாக 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த தடைகள் விலகி வாழ்வில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகளும், மனக்கவலைகளும் மறைந்து மனநிம்மதி ஏற்படும். நீங்கள் திட்டமிட்ட காரியத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும். கணவன்-மனைவி உறவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பெரியவர்களின் ஆசியும் மனதிற்கு சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தெய்வீக, ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் புத்திரவழியில் பூரிப்புகள் தரக்கூடிய இனிய சம்பவங்களும் நடைபெறும். தொழில், வியாபார ரீதியாக எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு தனது சொந்த நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும், லட்சுமி கடாட்சமான நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள்கூட ஒன்றுகூடி மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். 19-12-2017 முதல் சனி சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் அம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீடான விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். விநாயகர், துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு தன் சொந்த நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்யமுடியும். பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். சர்ப்பசாந்தி செய்வது, சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

பரிகாரம்
சனி 7-ல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சனிக்கிழமைகளில் சனிக்குப் பரிகாரம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

2,8-ல் சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, விநாயகர் , துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8.
நிறம்: பச்சை, வெள்ளை.
கிழமை: புதன், வெள்ளி.
கல்: மரகதம்.
திசை: வடக்கு.
தெய்வம்: விஷ்ணு.

Leave a Comment