சிவவாக்கியர் பாடல்கள் 41 – 60

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாறு தெங்கனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் (41)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (42)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

ஒடுக்க நிலை
சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

அறிவு நிலை
கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே (46)

அறையினில் கிடந்தபோது அன்று தூமை எனகிறீர்
துறை அறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்கனே (47)

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டிருண்டு சொற்குருக்கள் ஆனதே (48)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆவதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே (49)

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையைப் பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய்கடந்தது உம்முளே விரைந்து கூடல் ஆகுமே (50)

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே (51)

இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண் திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்ற மயம் யாவர் காண வல்லரோ (52)

நாழிஉப்பு நாழி உப்பு நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
எருதில் ஏறும் ஈசனும்இயங்கு சக்ரதரனையும்
வேறு வேறு பேசுவார் வீழ்வர் வீண்நரகிலே (53)

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியும் அவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே (54)

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின்
அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே (55)

உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே (56)

போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா நீ இராமராம ராமவென்னும் நாமமே (57)

அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வுவந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமன்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே (58)

அறத்திறங்க ளுக்கும்நீ அகண்டம் எண் திசைக்கும் நீ
திறத்திறங் களுக்குநீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே (59)

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம்நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மான நேர்மை கூர்மை என்ன கூர்மையே (60)

Leave a Comment