Meena rasi guru peyarchi palangal 2017-18

மீன இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். அஷ்டம குரு கெடுதல் செய்யும் என்பது பொது கருத்து. அதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன, பாக்கியாதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு அமர்வதாலும், உங்கள் இராசிநாதன் மற்றும் ஜீவனாதிபதியான குரு பகவான், கேந்திராதிபதி ஆவதாலும், கேந்திராதிபதி கெடுவதால் கெடுதல் செய்ய மாட்டான். உங்கள் இராசிக்கு 2, 4, 12-ம் இடத்தை குரு பார்வை செய்வதாலும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தில் நிலவிய சண்டை, சச்சரவுகள் அகலும். தனலாபம் பெருகும். பொன் – பொருள் சேரும். இடப்பெயர்ச்சி உண்டாகும். உத்தியோகத்திலும் இடப்பெயர்ச்சி சிலருக்கு ஏற்படலாம். புது வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. தெய்வ தரிசனம், புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இதுநாள்வரை பிடித்திருந்த நோய் நொடி விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சரி, எந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரியுமா? பெற்றோரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பது பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும். வழக்கு விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. மற்றபடி, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நல்லதே செய்வார். நல்வாழ்த்துக்கள்

 

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 

 

 

 

எப்பொழுதும் கலகலப்பாகப்பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே! பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வாக்கியப்படி 2 -9-2017 முதல் 4-10-2018 வரை அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 5-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் புத்திரவழியில் வீணான பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துவகையிலும் வீண்விரயங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தாமதமான நிலையே நிலவும். நல்லவரன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடு களால் அபிவிருத்தி குறைவதோடு பொருட்தேக்கமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியற்ற நிலையே தொடரும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் உடல்நிலை சோர்வடைந்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். நல்லதாக நினைத்துப் பேசும் வார்த்தைகளால் பத்திரிகையாளர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளை கண்ணெதிரேயே பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்.

 

உடல் ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். உடல் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாவதால் மனஅமைதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உங்கள் பலமும், வலிமையும் குறையும். மனைவிக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், வீண்விரயங்கள் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்ததால் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

 

குடும்பம், பொருளாதாரநிலை 

குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.

 

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடைப்படும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகையை ஈடுபடுத்தி நீங்கள் செய்யும் எந்தவொரு காரியத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் தேவையற்ற சங்கடங்களைச் சந்திப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும். தொழிலாளர்களும் அனுகூலமாக அமையமாட்டார்கள். கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்லபெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்படும். நிலுவைத் தொகைகள் கைக்குக் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

 

பெண்கள் 

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் தடைகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். புத்திரவழியில் வீண் செலவுகளும், மனசஞ்சலங்களும் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும்.

 

அரசியல் 

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.

 

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

 

கலைஞர்கள் 

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.

 

மாணவமாணவியர்

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை

ராசியாதிபதி குரு பகவான் தன, பாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நன்மை, தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிட முடியும். குடும்பத் திலிருந்த மருத்துவச்செலவுகள் படிப்படியாகக் குறையும். அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள் என்றாலும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் அடையமுடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும். அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளநிலை இருந்தாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலையே நிலவும். சில நேரங்களில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். குருப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, செரிமானக்கோளாறுகள் உண்டாகும். பணவரவுகளும் அளவுக்கதிகமாக எதிர்பார்க்க முடியாது. செலவுகள் கட்டுக்கிடங்கி இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதே நல்லது.  சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எந்தவொரு புதிய முயற்சியிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

 

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை

ராசியாதிபதி குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் பாதிப்புகள் மட்டுமின்றி அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு மனஅமைதியும் குறையும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படுவதால் குடும்பத்தேவை களைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும். பணப் பற்றாக்குறை யினால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்  தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை ஏற்பட்டு பொருள் தேக்கமடையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் வீண்பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். எந்தவொரு புதிய முயற்சிகளில் ஈடுபடும்போதும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரியநேரிடும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்துப் பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை

குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ல் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பிரமாதமான அனுகூலங்களை அடைவீர்கள். கடந்தகால பிரச்சினைகள் குறையும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் குறையும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், அதிகரிக்கும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். உற்றார்-உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆர்டர்கள் குவியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமானநிலை ஏற்படும். அரசியலில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

 

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை

ராசியாதிபதி குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்-மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் சுமாரான நிலை உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்-வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் கடன்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் சில தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் சுமாரான வேலை வாய்ப்பினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடையமுடியும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்துவிடமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

 

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஜலத் தொடர்புடைய பாதிப்புக்களால் மருத்துவச்செலவுகள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையே நிலவும். நீங்களே நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண்பிரச்சினைகளை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்படையும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பிறர்செய்ய வேண்டிய பணிகளையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பணவிவகாரங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே மேன்மையை அடையமுடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வீண்பிரச்சினை களை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது மிகவும் நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடையமுடியும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

 

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1,2,3,9.

கிழமை: வியாழன், ஞாயிறு.

திசை: வடகிழக்கு.

கல்: புஷ்ப ராகம்.

நிறம்: மஞ்சள், சிவப்பு     .

தெய்வம்:  தட்சிணாமூர்த்தி.

 

Leave a Comment