புகழ்த்துணை நாயனார்.

கும்பகோணத்திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. அத்தலம் அரிசிற்கரைபுத்தூர் எனவும் வழங்கப்பட்டது. அத்திருத்தலத்தின் தற்போதைய பெயர் அழகாபுத்தூர் என்பதாகும். இது கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் திருநறையூர் செல்லும் வழியில் உள்ளது.
இத்திருத்தலத்தில் இறைவனான சிவனாருக்கு ஆலய வழிபாட்டுத் தொண்டு மேற்கொள்ளும் வழியில் புகழ்த்துணையார் என்பவர் அவதரித்தார்.

அவர் தம் மனதால் இறைவனை தியானித்து, வாயால் அர்ச்சித்து, உடலால் வழிபாடு மேற்கொள்வதை பெரும் தவப்பேறாக எண்ணினார்.
அதன்படி இறைவனுக்கு நீராட்டால் பூசனை போன்று உடலால் செய்யக்கூடிய செயல்களோடு, மனதால் இறைவனின் ஐந்தெழுத்து திருநாமத்தை தியானித்தும் செந்நாவினால் தமிழ் மறைகளை ஓதியும், உடல் மனம் மொழி என்ற மூவழிகளிலும் இறைத்தொண்டு புரிந்துவந்தார்.
தினமும் சிவாலயத்திற்குச் சென்று இவ்விதிப்படி பூசனைகள் செய்து மனம் உருகி வழிபட்டு வந்தார்.

இவ்வாறு இருக்கையில் ஒருசமயம் நீண்ட நாட்கள் மழை இல்லாமல் விளைச்சல் குறைந்து பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.இதனால் மக்கள் உணவினைத் தேடி வேறு நகரங்களுங்கு புலம் பெயர்ந்தனர். உணவினைத் தேடுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை மக்கள் கழித்தனர். இதனால் சிவாலயத்தைப் பற்றி நினைத்துக் கூடப்பார்க்கவில்லை

எவ்வாறாயினும் இறைவழிபாட்டிற்கு தம்மால் யாதொரு குறையும் நேராவண்ணம் செயல்படுத்தி வந்தார்.பஞ்சம் அதிகரித்ததால் நிவேதன பிரசாதம் செய்யவும் தாம் உண்ணவும் உணவு இல்லாமற்போயிற்று.பசியுடனே வெறும் நீறும் காட்டு பூக்களையும் பறித்துச்சென்று இறைவனை நீராட்டி பூசனை செய்து வழிபட்டார். தாம் நீர் மட்டுமே அருந்தினார். உணவு இன்மையால் உடல் தளர்ந்தது, சோர்வுற்றது. இறைவனுக்கு மங்களநீராட்ட தண்ணீர் குடத்தை ஆலயத்திற்குள் தூக்கிச்செல்லக்கூட முடியாமல் தூக்கிச்சென்றார். குடத்தை உயர்த்தி இறைவனுக்கு நீராட்ட முனைந்த போதினில் அடியார் மயக்கமுற்றார். அடியார் நிலந்தன் மீது வீழ்ந்துவிட்டார். தண்ணீர்குடம் அடியார் கீழே வீழும்போதினில் கை நழுவி இறைவன் திருமேனி மீதினில் மோதி இறைவனுக்கு நீராட்டிவிட்டு கீழே உருண்டோடியது. அந்த குடம் இறைவனை பார்த்து உம்மடியார் உணவின்றி மயக்கமுற்று நிலந்தன்மேல் வீழ்ந்து கிடக்கிறார். உம்மனம் என்ன கல்லா? ஏன் இன்னும் இரங்கவில்லை என்று கேட்பதுபோல் இருந்தது.

உடனே இறைவன் அடியார் கனவில் தோன்றி எம் பீடத்தின் மீது தினமும் ஒரு பொற் காசு வைப்பதாகவும் அக்காசை கொண்டு பஞ்சம் தீரும்வரை உணவு பொருட்கள் வாங்கி உண்டு மகிழ்ந்து தம்மையும் மகிழ்விக்கும்படி பணித்தார்.

அடியாரும் மயக்கத்தினின்று விடுபட்டவர் போன்று எழுந்து இறைவனாரை பார்த்தார். இறைவனிடத்து ஓர் பொற்காசு ஒளிர்வதை கண்டு அதிசயித்தார். அப்பொற்காசினை கொண்டுசென்று தேவையான பொருட்களை வாங்கிச்சென்று இறைவனுக்கும் குறைவில்லா பூசனைசெய்து தாமும் யாதொரு குறையுயிலா வாழ்வதனை வாழ்ந்தார்.நாட்டில் பஞ்சமும் தீர்ந்தது. வளமும் பெருகிற்று.புகழ்த்துணையாரின் பெருமையுடன் இறைவன் பெருமையும் பரவிற்று.சிறப்புடன் வாழ்ந்து சிவனது திருவடிபேறு பெற்று சிவபுரம் சார்ந்தார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் அருளையும் பெற்றார் புகழ்ந்துணை நாயனார்.

புகழ்த்துணை நாயனார் குருபூசை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது.

புகழ்த்துணை நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.