Thodudaiya Seviyan Lyrics Tamil

திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாடிய முதல் திருப்பதிகம் – திருப்பிரமபுரம் பதிகம் தோடுடைய செவியன் பாடல் (Thodudaiya seviyan) சாமி பெயர்: பிரமபுரீசர், தேவியார் பெயர்: திருநிலைநாயகியம்மை திருத்தோணியில் வீற்றிருப்பவர்- தோணியப்பர். ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக இந்த பதிவின் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. தோடுடைய செவியன் பாடலை நீங்கள் படித்த பின்பு அந்த பொருளையும் படித்து பாடலின் சிறப்பினை அறிந்துக்கொள்வோம்…. ஓம் நமஹ சிவாய!!!

தோடுடைய செவியன் பாடல் – வரலாறு

திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப் போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி கீழ்கண்ட பாடலைப் பாடியது….

தோடுடைய செவியன் பாடல் வரிகள் – திருப்பிரமபுரம் பதிகம்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2)

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)

மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)

தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)

 

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ

ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

தென்னாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலைமலையானே போற்றி போற்றி!!!

சிவபுராணம் பாடல் வரிகள்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல்

 

Leave a Comment